நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வருமென முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மறுதணிக்கை செயல்முறையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, படம் வெளியீட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, மறுஆய்வுக் குழு பரிந்துரைத்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, படக்குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனிநீதிபதி வழங்கிய உத்தரவிற்கு தற்காலிகத் தடை விதித்ததுடன், தணிக்கை வாரியத்திற்கு தேவையான கால அவகாசம் வழங்கி, வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது.
இதன் பின்னர் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, மறு தணிக்கைக்காக படம் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான மறுஆய்வு மும்பையில் நடைபெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என்பது மறுஆய்வின் போது பரிசோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
