Advertisement

‘ஜன நாயகன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… முடிவுக்கு வருகிறதா தணிக்கை சான்றிதழ் விவகாரம்?

இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த மூன்று மாதங்களாக தணிக்கை தொடர்பான சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டியிருந்த இந்த திரைப்படம் வெளியிடப்படாமல் தள்ளிப் போனது. இதையடுத்து படக்குழு நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. இருப்பினும் சட்ட ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது என்பது தெளிவானதால், தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை பின்னர் வாபஸ் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதி சென்னையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான மறு தணிக்கை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தணிக்கை குழுவில் இருந்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த மறு தணிக்கை நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட அந்த மறு தணிக்கை தற்போது நாளை சென்னையில் நடைபெற உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கை வாரிய உறுப்பினர்கள் நாளை இந்த திரைப்படத்தை பார்வையிட உள்ளனர். அவர்கள் படத்தை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டதாக கருதி தணிக்கை சான்றிதழ் வழங்கினால், விரைவில் படம் வெளியிடப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கு முன்பாக ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகுமா என்பது குறித்து இன்னும் சந்தேகம் நீடிக்கிறது. எனவே ஏப்ரல் 23க்கு பின்னர் இந்த திரைப்படம் வெளியாகும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply