என்னை நஷ்டத்தை தாங்கும் அளவுக்கு பணக்காரனாக மாற்றியவர் கே பாலச்சந்தர் – பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி!

இந்திய திரைப்பட உலகில் முக்கியமான நடிகராக திகழ்பவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘டூயட்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அவர், இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தை பெற்றார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இயக்குநர் கே. பாலச்சந்தர் குறித்து பிரகாஷ் ராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தனது ஆரம்ப கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். “கன்னட சினிமாவில் நான் ஆரம்பத்தில் வருமானத்திற்காக சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். அந்த காலத்தில் நான் முதன்முதலாக பாலச்சந்தரை சந்தித்தபோது, நாடகம் மற்றும் இலக்கியம் குறித்து அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அந்த உரையாடல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது ‘இவ்வளவு நாள் நீ ஏன் என்னை வந்து சந்திக்கவில்லை?’ என்று அவர் என்னிடம் கேட்டார். அதன் பிறகு தான் அவர் தனது படத்தின் மூலம் என்னை அறிமுகப்படுத்தினார். அந்த காலத்தில் பாலச்சந்தர் படத்தில் ஒருவர் அறிமுகமாகுவது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. அதன் பின்னர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் என் திரைப்படப் பயணம் உண்மையாக ஆரம்பமானது” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது, “பாலச்சந்தர் இயக்கிய ‘பொய்’ திரைப்படத்தை நான் தயாரித்தேன். அது அவருடைய 100வது திரைப்படமாகும். அவர் 99 படங்களை இயக்கி முடித்த பிறகு, ஒரு நாள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு சீரியலில் நடிக்க அழைத்தார். அப்போது நான் ‘நீங்கள் ஏன் படம் இயக்கவில்லை?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘என் படத்தை யார் தயாரிப்பார்?’ என்று கேட்டார். உடனே நான் ‘நான் தயாரிக்கிறேன், உங்களுக்கு என்ன படம் எடுக்க வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினேன். அதன் பிறகு அந்த திரைப்படத்தை நான் தயாரித்தேன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் பாலச்சந்தர் மிகவும் வருத்தப்பட்டார்” என்று நினைவுகூர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, “அப்போது பாலச்சந்தர் என்னிடம் ‘நான் தான் உன்னை அறிமுகப்படுத்தினேன். இப்போது என்னால் நீ நஷ்டம் அடைந்துவிட்டாய்’ என்று வருத்தப்பட்டார். அதற்கு நான் ‘சார், நான் முதலில் சென்னைக்கு வந்தபோது என் பாக்கெட்டில் வெறும் 120 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் இந்த படத்தால் நான் மூன்றரை கோடி ரூபாய் இழந்திருந்தாலும், நான் தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு போகவில்லை. ஏனென்றால் நீங்கள் தான் என்னை அந்த நஷ்டத்தை தாங்கும் அளவுக்கு பணக்காரனாக மாற்றியவர். உங்கள் முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்தால், அந்த படத்தின் மூலம் நான் சம்பாதித்த லாபம் அதுவே’ என்று கூறினேன். அதை கேட்ட உடனே அவர் என்னை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். நான் தயாரித்த அவரது படம் தோல்வியடைந்தது என் துரதிர்ஷ்டம். ஆனால் அவர் தனது வாழ்க்கையில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர். அவரது கடைசி மூச்சு வரை அவருடன் எனக்கு மிக நெருக்கமான உறவு இருந்தது. அவரால் எனக்கு கிடைத்தது அளவிட முடியாத அளவு பெரிது” என்று பிரகாஷ் ராஜ் உணர்ச்சியுடன் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading