99 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 66வது எண் வீட்டை வாங்கி தனது கணவருடன் வசித்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி. அதே குடியிருப்பில் எதிரே இருக்கும் 99வது பிளாட்டில் வசிக்கும் ஸ்வேதாவுடன் அவருக்கு நல்ல நட்பு உருவாகிறது. ஒருநாள் ஸ்வேதாவின் கணவர் அவரைக் கொலை செய்ய முயற்சிப்பதாக ரச்சிதா சந்தேகப்படுகிறார். இதை அவர் மற்ற குடியிருப்பாளர்களிடம் கூறும்போது, 99வது வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரச்சிதா, அந்த பிளாட்டின் உரிமையாளரான மூர்த்தியிடம் விசாரிக்கிறார். அப்போது அவர், “அந்த வீட்டில் என் மகள் ஸ்வேதா தான் வசித்தார். அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் சம்பந்தப்பட்டவரை நான் கொல்ல நினைக்கிறேன். ஆனால் அவள் என்னைத் தடுக்கிறாள். உன்னிடம் அவள் ஏன் பேசுகிறாள் என எனக்கு தெரியவில்லை” என்று கூறுகிறார். இதன் பின்னர் என்ன நடக்கிறது, ஸ்வேதா எப்படி இறந்தார், ரச்சிதாவின் கணவர் அவரைக் கொல்ல முயன்ற திட்டம் வெற்றியடைந்ததா என்பதே ‘99/66’ திரைப்படத்தின் மீதமுள்ள கதை.
இந்த திரைப்படத்தை எம்.எஸ். மூர்த்தி இயக்கி, தயாரித்து, நடித்தும் உள்ளார். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எதிரெதிர் வீடுகளில் வசிக்கும் இரண்டு பெண்களை மையமாகக் கொண்டு, ஒரு பெண்ணின் உடலில் இன்னொரு பெண்ணின் ஆவி புகும் கதையாக இது அமைந்துள்ளது.சின்னத்திரையில் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். பல காட்சிகளில் ஹோம்லியாகவும் அழகாகவும் தோன்றுகிறார். குறிப்பாக பேய் அவரை ஆட்கொண்ட பின்பு அவர் காட்டும் நடிப்பு கவனிக்க வைக்கிறது. ஆனால் அவருக்கான காட்சிகள் குறைவாக இருப்பது ஏமாற்றமாக உள்ளது. அவரை இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் படம் மேலும் நன்றாக அமைந்திருக்கும்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான எம்.எஸ். மூர்த்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் கதையில் அவருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரச்சிதாவின் எதிர் வீட்டில் வசித்த ஸ்வேதாவின் தந்தையாக அவர் நடித்துள்ளார். இடைவேளைக்குப் பிறகு அப்பா-மகள் பாசக் காட்சிகள், ஸ்வேதாவுடன் தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் அவரது கணவருடனான பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஆனால் சில காட்சிகள் அதிகமாக நாடகத்தன்மையுடன் இருப்பது தெரிகிறது.
பெண் சாமியாராக கே.ஆர். விஜயா நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. மேலும் ஒரு சித்தராக தயாரிப்பாளர் தேனப்பனும் நடித்துள்ளார். இந்த பகுதிகள் ஓரளவு ஆறுதலாக உள்ளன. ரச்சிதாவின் கணவராக சபரி மற்றும் ஸ்வேதாவின் கணவராக ரோஹிந்த் நடித்துள்ளனர். இவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.பாடல்களில் விநாயகர் பாடலும், கிளைமாக்ஸில் வரும் கருப்பசாமி பாடலும் ஓரளவு கேட்கும்படி உள்ளன. புத்த மதத்தை வழிபடும் கதாபாத்திரமாக ஸ்வேதாவை காட்டி, அதனுடன் தொடர்புடைய சில காட்சிகள் மற்றும் பாடல்களையும் இணைத்துள்ளனர். ஆனால் அவை கதையுடன் முழுமையாக இணைந்ததாக தெரியவில்லை.
சீரியல் புகழ் சேவிலோ ஒளிப்பதிவு செய்துள்ளார். அது ஓரளவு திருப்தி அளிக்கிறது. பல நடிகர்கள் வந்து சென்றாலும் யாரும் பெரிதாக நினைவில் நிற்கவில்லை. எனினும் தன் வாழ்க்கையில் நடந்த துயரம் மற்றொரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது என்று நினைக்கும் பேய் கதாபாத்திரம் மற்றும் அதற்காக அவள் செய்யும் செயல்கள் படத்தில் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக அன்பு மற்றும் மனிதநேயத்தை பேசும் சில காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
