‘முஸ்தபா முஸ்தபா’ , திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாப்பிள்ளையான சதீஷை பற்றிய ஒரு கிளுகிளு வீடியோ யூடியூப்பில் வேகமாக வைரலாகிறது. அந்த வீடியோ நீக்கப்படவில்லை என்றால் கோபக்காரியான தனது காதலி மோனிகா திருமணத்தை நிறுத்திவிடுவார் என்று பயப்படும் சதீஷ் பெரும் பதட்டத்தில் ஆழ்கிறார்.அந்த வீடியோவை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதற்காக தனது நண்பர்களான சுரேஷ் ரவி மற்றும் கருணாகரனின் உதவியை நாடுகிறார். அந்த வீடியோவில் என்ன இருக்கிறது, அதை எடுத்தது யார், அதை இணையத்தில் பரப்பியது யார், இறுதியில் சதீஷ் மற்றும் மோனிகாவின் திருமணம் நடந்ததா என்பதே ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தின் கதை. இந்த படத்தை புதுமுக இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் வேலை செய்யும் சதீஷ் மற்றும் அவரது நண்பர்களை சுற்றி நடக்கும் நட்பு மற்றும் நகைச்சுவை சம்பவங்களே படத்தின் மையமாக அமைந்துள்ளது. அதனால் தான் இந்த படத்திற்கு ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் காமெடி, காதல் மற்றும் சற்று கவர்ச்சி அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சதீஷ் கதாநாயகனாக இருந்தாலும் அதிக பில்டப் இல்லாமல் இயல்பாக நடித்துள்ளார். காதலியுடன் ஏற்படும் சண்டைகள், நண்பர்களால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வைரலான வீடியோவால் ஏற்படும் பதட்டம் போன்ற காட்சிகளில் அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. ஆனால் அவருக்கே உரிய காமெடி பல இடங்களில் குறைவாக இருப்பது தெரிகிறது.

சதீஷின் நண்பர்களாக வரும் சுரேஷ் ரவி மற்றும் கருணாகரன் பல காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு கருணாகரனின் நடிப்பு மற்றும் அவரைச் சுற்றிய ட்விஸ்ட் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. ஆனால் அவருடைய காதல் சம்பந்தப்பட்ட சில உறவுமுறை காட்சிகள் ஓவராக இருப்பது போல தோன்றுகிறது.மேலும் விஜய் டிவி புகழ் நடித்துள்ள காட்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை. சாம்ஸ், சூப்பர்குட் சுப்ரமணி, லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் அவர்களது கதாபாத்திரங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை.

சதீஷின் காதலியாக வரும் மோனிகாவுக்கும், சுரேஷ் ரவியின் காதலியாக வரும் மானசாவுக்கும் அதிக காட்சிகள் இல்லை. கருணாகரனின் காதலியாக வரும் பெண் பழைய வி.ஜே மகேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவில் தோன்றும் ஐஸ்வர்யா தத்தா அழகாக தோன்றி சில காட்சிகளில் கவனத்தை ஈர்க்கிறார். அந்த வீடியோ எப்படிப் பரவுகிறது, அதன் பின்னணி என்ன என்பது போன்ற அம்சங்கள் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் உள்ளது.

விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவும், ஜோன்ஸ் இசையும் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. கதை விஜே பார்வதியிடம் சொல்லப்படுவது போல திரைக்கதை அமைந்துள்ளது. ஒரு ட்விஸ்ட் மட்டும் சிறப்பாக அமைகிறது. மொத்தத்தில் நட்பை மையமாகக் கொண்டு காமெடி திரைப்படமாக உருவாக்க முயன்றாலும் சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருவது உண்மை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading