மருத்துவர் டூ நடிகை… தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்க்கும் ரேச்சல் ரெபெக்கா!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் வலம் வருபவர் நடிகை ரேச்சல் ரெபெக்கா. மருத்துவராக இருந்த ரேச்சல் ரெபெக்கா, ‘இப்படை வெல்லும்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் நீதிபதியாக சில நிமிடங்கள் மட்டுமே தோன்றியிருந்தாலும், அந்த கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருந்ததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்த ‘குட் நைட்’ திரைப்படத்தில் அவர் அக்கா கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானதால், அதில் நடித்த ரேச்சல் ரெபெக்காவின் நடிப்பும் பலரது பாராட்டைப் பெற்றது. மேலும் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் ரேச்சல் ரெபெக்கா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்கள் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தபோதும், அடுத்ததாக பெரிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரப்படாமல், சில நிமிடங்கள் மட்டுமே வரும் கதாபாத்திரமாக ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நடித்தார். அந்த சிறிய கதாபாத்திரமே சமூக வலைத்தளங்களில் பல ரீல்ஸ்களில் இடம்பிடித்து ரசிகர்களின் கவனத்தை மீண்டும் பெற்றது.

தற்போது ‘தாய்கிழவி’ திரைப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக பதின்ம வயது மகனுக்கு அம்மாவாக நடித்ததுடன், உசிலம்பட்டி பகுதியில் பேசப்படும் வசன உச்சரிப்புகளை சிறப்பான உடல் மொழியுடன் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் ரேச்சல் ரெபெக்கா, தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக முன்னேறி வருகிறார். எதிர்காலத்தில் அவர் மேலும் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தும் விருதுகளை வெல்லக்கூடிய நடிகையாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading