98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதிலிருந்தும் சினிமா துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்ள உள்ளனர். உலக சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்க உள்ள பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் வில் அர்னெட், ராபர்ட் டௌனி ஜூனியர், அனி ஹேதவே, பால் மெஸ்கல், க்வினெத் பால்ட்ரோ ஆகியோருடன் சேர்ந்து இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பிரியங்கா சோப்ரா ஏற்கனவே தொகுத்து வழங்கிய அனுபவம் கொண்டவர். மேலும் 2017ஆம் ஆண்டில் அவர் பார்வையாளராக கலந்து கொண்டு சிவப்பு கம்பள வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற 2026 கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவிலும் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராக கலந்துகொள்வது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழா மார்ச் 16ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோனே தொகுப்பாளராக கலந்துகொண்டு கவுரவிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோருடன் ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துவருகிறார். இந்த திரைப்படம் பிரியங்கா சோப்ரா நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
