இயக்குநர் சுந்தர் சி தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் . இதனைத்தொடர்ந்து விஷால் மற்றும் தமன்னா நடித்துவரும் ‘புருஷன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் நேற்று நடைபெற்ற ஒரு அழகு நிலைய கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம், “உங்களுக்கு மிகவும் பிடித்த பர்சனாலிட்டி கொண்ட ஒரு நடிகர் மற்றும் நடிகை பெயரை சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சுந்தர் சி, தனது ஆரம்ப காலங்களில் நடிகர் கார்த்திக்குடன் பணியாற்றியதாகவும், அவரது பர்சனாலிட்டி மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் என்ன அணிந்தாலும் அழகாக இருப்பவர் என்றால் அது ரஜினி மட்டுமே என்றும் தெரிவித்தார். அவர் தனியாக ஸ்டைலான ஆடைகளை அணிய வேண்டிய அவசியமே இல்லை; அவர் அணிவது எல்லாமே தானாகவே ஸ்டைலாகிவிடும் என்றார்.
பெண் நடிகைகள் குறித்து பேசும்போது முதலில் தனது மனைவியின் பெயரையே கூறுவேன் என்று தெரிவித்தார். அதன் பின்னர் நடிகை ரம்பாவை குறிப்பிடலாம் என்றும், அவர் தன்னை மிகவும் அழகாக அலங்கரித்து கொள்வார் என்றும் கூறினார். அதற்கு பிறகு த்ரிஷாவை கூறலாம் என்றும், அவரது உடை அணியும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் பாராட்டினார். தற்போது தாம் பணியாற்றும் நடிகைகளில் தமன்னாவையும் குறிப்பிடலாம் என்றும் கூறினார்.
இதற்கிடையில் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ஒரு பட வாய்ப்பை ஏன் மறுத்தீர்கள்? அது உங்கள் கனவு திட்டமான ‘சங்கமித்ரா’ திரைப்படத்தை இயக்குவதற்காகவா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி, அந்த விஷயங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்தார். தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்மென்ட் இருப்பதால் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தை உடனடியாக செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போதுள்ள பணிகளை முடித்துவிட்டு அந்த திரைப்படத்தை தொடங்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் கூறினார். தற்போதுள்ள வேலைகளுக்கு நடுவே இரண்டு ஆண்டுகளை ஒரே ஒரு படத்திற்கு செலவிடுவது சாத்தியமில்லாத விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.
