திருமணமாகி சில மாதங்களிலேயே தனது கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், அந்த துயரமான சம்பவத்தின் அதிர்ச்சியாலும் குற்ற உணர்ச்சியாலும் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறார். தனது சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் துயரங்களுக்கு தானே காரணம் என்று எண்ணத் தொடங்கும் அவர், மனவேதனையில் தற்கொலை முயற்சிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார். அத்தகைய கடினமான தருணத்தில் துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா அவருக்கு ஆறுதல் கூறி, உண்மையை புரிய வைக்க முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் தனது திருமண வாழ்க்கை மற்றும் தனது முதல் காதல் பற்றிய நினைவுகளை நிவேதிதா பகிர்ந்து கொள்கிறார். அந்த உரையாடலின் போது தன் கணவரை தானே கொன்றதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். நிவேதிதா சதீஷ் தனது கணவரை கொன்றதாக கூறுவதற்கான காரணம் என்ன? அவரது கணவரின் மரணத்தின் பின்னால் இருக்கும் உண்மை என்ன? என்பதையே இந்த திரைப்படத்தின் மீதமுள்ள கதை வெளிப்படுத்துகிறது.
இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள நிவேதிதா சதீஷ், வலுவான கதாபாத்திரம் இருந்தபோதிலும் தனது நடிப்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. காதலன் மற்றும் கணவர் ஆகிய இருவருக்கும் இடையில் மனஅழுத்தத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் உளவியல் நிலையை வெளிப்படுத்த வேண்டிய சில காட்சிகளில் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் உண்மை வெளிப்படும் முக்கியமான தருணங்களில் அவர் வெளிப்படுத்த வேண்டிய பதற்றம், பயம் போன்ற உணர்வுகள் முழுமையாக வெளிப்படாததால் அந்த காட்சிகளின் தாக்கம் குறைந்து விடுகிறது. நிவேதிதாவின் முன்னாள் காதலனாக சிபி சந்திரன் மற்றும் அவரது கணவராக அதுல் நடித்துள்ளனர். இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவிற்கு நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக அதுலுக்கு அதிகமாக நடிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அனுபவமிக்க நடிப்பின் மூலம் நடிகர் நாசர் இந்த திரைப்படத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். துறவறம் பூண்ட சகோதரியாக நடித்துள்ள லட்சுமி பிரியா சந்திரமெளலி அமைதியான மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் கதைக்கு தேவையான சமநிலையை வழங்குகிறார்.
மனித வாழ்க்கையில் பல சம்பவங்கள் தற்செயலாகவே நிகழ்கின்றன என்பதைக் கூற முயன்றுள்ளார் இயக்குநர் விஜய் ரங்கநாதன். ஆனால் அந்த கருத்தை அனைத்து தரப்பு பார்வையாளர்களும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கூறாமல், மிகவும் மெதுவாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார். வைசாக் சோமநாத் இசையமைப்பில் பாடல்கள் பெரிதாக நினைவில் நிற்காதபோதிலும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் கதையில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து காட்சிகளை அமைத்துள்ளார்.
