தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, படிப்படியாக தென்னிந்திய அளவில் முன்னணி இளம் நடிகையாக உயர்ந்து வருகிறார் ஸ்ரீலீலா. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்துவரும் அவர், தற்போது பாலிவுட்டிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார்.
அந்த வகையில், பாலிவுட்டின் இளம் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து ‘ஆஷிக்கி 3’ திரைப்படத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ளார். படம் இன்னும் வெளியாகாத நிலையில், மீண்டும் அதே நடிகருடன் இணைந்து புதிய ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.
இந்தப் படம் கிக் பாக்ஸிங் வீராங்கனை தஜமுல் இஸ்லாமின் வாழ்க்கையைத் தூண்டுகோலாகக் கொண்டு உருவாகிறது. இதில் கிக் பாக்ஸிங் வீராங்கனையாக ஸ்ரீலீலா நடிக்கிறார். அவரது பயிற்சியாளராக கார்த்திக் ஆர்யன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தில் நடித்தபோது ஸ்ரீலீலா சில சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டதுடன், அதிரடி காட்சிகளிலும் நடித்திருந்தார். எனவே இந்தப் படத்தில் கிக் பாக்ஸராகவும் அவர் திறமையாகத் திகழ்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
