முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழும் வடிவேலு, தற்போது முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ‘போர்முழக்கம்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
லாலு மற்றும் டோனா தாமஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பினில் இயக்குகிறார். ‘போர்முழக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வடிவேலு வக்கீலாக நடித்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையாக கதைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தில், இதுவரை அவர் செய்யாத வகையான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் ஸ்ரீநாத் பாசி நடித்த ‘போங்கலா’ திரைப்படத்தை இயக்கியவர் பினில். அவரது இயக்கத்தில் உருவாகும் முதல் தமிழ் திரைப்படமாக ‘போர்முழக்கம்’ அமைகிறது. இந்தத் தகவலை பினில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
