‘கிரீடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’, ‘தாண்டவம்’, ‘வனமகன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் ஏ.எல். விஜய். தற்போது அவர் தனது பெயரை விஜய் என்று மாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு பெரிய வெற்றிப் படத்தை வழங்க வேண்டும் என்ற முயற்சியில் அவர் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் இயக்கிய ‘வனமகன்’, ‘வாட்ச்மேன்’, ‘மிஷன் சாப்டர் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. மேலும், நடிகை அனுஷ்காவை வைத்து இயக்கத் திட்டமிட்டிருந்த திரைப்படமும் பல காரணங்களால் தாமதமாகி வருகிறது.
இந்த சூழலில், புதுமுக நடிகர்கள் மதும்கேஷ் மற்றும் ஜியாசங்கர் ஆகியோரை முன்னிலைப்படுத்தி விஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க ஹாலந்தில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்களை மதன்கார்க்கி எழுதியுள்ளார். புதிய கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படம் குறித்து இயக்குநர் விஜய் அளித்த பேட்டியில், “இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் ஹாலந்தில் நடைபெற்றது. மலையாள நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் விஜி சந்திரசேகர் ஆகியோரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். என் முந்தைய படங்களில் நா. முத்துக்குமார் எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது மதன்கார்க்கி எனக்கு மிகவும் பொருத்தமாக உள்ளார். ஒவ்வொரு பாடலையும் மணிநேரங்களாக பதிவு செய்து, மாதங்களாக அதனை மேம்படுத்தி மெருகேற்றும் பணியை ஹாரிஸ் ஜெயராஜ் மேற்கொள்கிறார். இந்த படத்தின் விளம்பர காணொளியில் அவரையும் நடிக்க வைத்துள்ளோம். பல சிரமங்களையும் சவால்களையும் கடந்து ஹாலந்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “எனது முதல் திரைப்படம் ‘மின்னலே’. அந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த படத்தில் நடிகர் மாதவன், நடிகை ரீமா சென் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோர் அனைவரும் புதியவர்கள். சிறந்த கதை அமைப்பினால் அந்த படம் வெற்றி பெற்றது. அதுபோலவே இந்த திரைப்படத்திலும் புதிய முகங்கள் நடித்துள்ளனர். அதனால் எனக்கு பழைய நினைவுகள் மீண்டும் தோன்றுகின்றன” என்று பகிர்ந்துள்ளார்.
