முழுமையான அறிவியல் கற்பனை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘மகரம்’. இயக்குநர் அகஸ்டின் பிரபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திர சேகரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை அமல் டோமி மேற்கொண்டுள்ளார். அஜித், இஷிதா, அமர் ரமேஷ், நிர்மல், சாமி, அசோக் குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை நகரில் நடைபெற்றது.
இயக்குநர் அகஸ்டின் பிரபு நிகழ்வில் பேசுகையில், “நான்கு தனித்தனி கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு திரைப்பட உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கிருந்தது. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் செய்யாத முயற்சியை ஒரு சிறிய அணியாக நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இந்த முயற்சிக்கு காரணம். நல்ல யோசனை தோன்றும் போது அதை தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் அணியின் நம்பிக்கை. அந்த எண்ணத்திலிருந்தே ‘மகரம்’ உருவானது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற கடலோர பகுதிகளில் நடைபெற்றது. சுமார் 70 சதவிகித காட்சிகள் கடலுக்குள் படமாக்கப்பட்டன. அது மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான முயற்சி. இருந்தாலும் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யவில்லை. இந்த திரைப்படம் சர்வதேச தரத்தில் உருவாகி, ஒரு உலகத் தர அனுபவத்தை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
