இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அஜித்தின் கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. தொடக்கத்தில் இந்த முயற்சி ஒரு ஆவணப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியானது. ஆனால் பின்னர் இது முழுநீள திரைப்படமாக உருவாகி வருவதாகவும், சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் வகையில் தயாராகி வருவதாகவும் இயக்குநர் விஜய் அளித்த பேட்டியில் விளக்கியிருந்தார். அஜித்தின் கார் பந்தய அனுபவங்கள் மற்றும் அதனைச் சுற்றிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் ஒரு தனியார் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அஜித் குறித்து பேசிய அவர், “அஜித் சார் ஒரு மிகச் சிறந்த மனிதர். ‘வெயில்’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் என்னை அழைத்து ‘கிரீடம்’ போன்ற பெரிய வாய்ப்பை வழங்கினார். அது எனது பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது.
அதன்பிறகு நாங்கள் இணைந்து ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பணியாற்றினோம். தற்போது அவருடைய கார் பந்தயத்தை மையமாகக் கொண்ட இந்த புதிய படத்திற்கும் நான் இசையமைத்து வருகிறேன். அஜித் சாருடன் தொடர்ந்து பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
