இந்திய அளவில் முன்னணி பாடகியாக திகழும் ஸ்ரேயா கோஷல், தேசிய விருதுகள் உட்பட பல்வேறு முக்கியமான விருதுகளை பெற்றவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, தனக்கென தனித்துவமான இடத்தை இசை உலகில் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரேயா கோஷல் பேசிய கருத்துகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகளில் இல்லை. ஒரு நேரடி இசை நிகழ்ச்சியில் அந்த பாடல் பாடப்படும் போது, ரசிகர்களும் சேர்ந்து பாடுவதே அதன் உண்மையான வெற்றி. ரசிகர்களின் உதடுகளில் அந்த பாடல் ஒலிப்பது தான் இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய விருதும், அங்கீகாரமும் ஆகும்” என்று கூறினார்.
மேலும் அவர், “விருப்பங்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ரசிகர்களின் மனதை வெல்வது அத்தனை எளிதான விஷயம் அல்ல. ஒரு பாடல், ஒருவர் எந்த மனநிலையில் இருந்தாலும் அவரது உள்ளத்தை தொட்டு, உள்ளார்ந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் போதே அந்த பாடல் உண்மையான வெற்றியை அடைந்ததாக சொல்ல முடியும்” என்று விளக்கமாக தெரிவித்தார்.
