மாஸ் ஹீரோவாக இருப்பதைவிட நல்ல மனசுள்ள ஹீரோவாக இருக்க விரும்புகிறேன் – நடிகர் விமல் டாக்!

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்தப் படம் குறித்து விமல் பகிர்ந்துகொண்ட கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. அவர் கூறியதாவது: “இயக்குநர் சொன்ன கதையை அதே உணர்வோடு முழுமையாக திரையில் கொண்டு வர முடியுமா என்று நான் முதலில் கேட்டேன். காரணம், கதை மிகவும் வித்தியாசமானது. ‘பாண்டிமுனி’ என்ற மாடு இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரமாக வருகிறது. ‘வடம்’ என்பது ஒரு வகை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டு. அந்தக் காட்சிகளை இயல்பாக நேரடியாகவே படமாக்கினோம்.

குற்றாலத்தில் வெளியூர் பகுதிகளில் இருந்து மாடுகளை கொண்டு வந்து, பல நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்த சமயத்தில் நடிகர் ரோபோ சங்கர் மறைந்த செய்தி வந்தது. அவருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் படப்பிடிப்பை நிறுத்தினால் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலை இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்திலேயே அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

என் மனைவியை அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தேன். என் சூழ்நிலையை புரிந்துகொண்ட அந்தப் பகுதி மக்கள் சார்பில், படத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர் ரோபோ சங்கர் நினைவாக 500 பேருக்கு சேலை வழங்கினார். மேலும், அந்தப் பகுதியில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் பிரசன்னா மற்றும் அவரது குழுவின் உழைப்பு மிகவும் கடினமானது. அவர்கள் ஹெட்செட் அணிந்து பணியாற்றுவார்கள். ஒரு நாள் நான் அவர்களில் ஒருவரின் ஹெட்செட்டை எடுத்து அவர்கள் பேசுவதைக் கேட்டேன். நண்பர்கள் என்பதால் தாராளமாக பேசிக்கொள்வார்கள்; வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டன.

எனக்கு மிகப்பெரிய மாஸ் ஹீரோ எனும் பெயர் தேவையில்லை. நல்ல மனம் கொண்ட கதாநாயகனாக இருந்தாலே போதும். எனது திறன் என்ன என்பதை நான் அறிந்திருக்கிறேன். கடவுள் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருந்தால் அதுவே போதுமானது. என்னை நம்பி முதலீடு செய்கிற தயாரிப்பாளருக்கு குறைந்தபட்சம் ஒரு அளவுக்காவது லாபம் கிடைக்கச் செய்தால் அதுவே எனக்கு திருப்தி. இந்தப் படத்தின் கதாநாயகி சனாஸ்கா. அவரின் பெயரை சரியாக உச்சரிப்பதே எனக்கு ஒரு சவாலாக இருந்தது. இந்த திரைப்படத்தில் அவர் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். நட்டி உடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது, ‘தாராளமாக அடியுங்கள், தயங்க வேண்டாம்’ என்று அவர் ஊக்கமளித்தார்” என்று விமல் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading