நடிகர் தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அவர் ‘வை ராஜா வை’ மற்றும் ‘லால் சலாம்’ போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அவர்களது ஒன்பதாவது திரைப்படத்தை அவர் இயக்க உள்ளார்.
இந்த புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதற்கு முன்பு ‘வை ராஜா வை’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்து பணியாற்றியிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
