தெலுங்கு திரைப்படங்களில் கடந்த மாதம் நடிகர் சிரஞ்சீவி நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு தற்போது அவர் அடுத்ததாக ‘ஆதர்ச குடும்பம் – ஹவுஸ் நம்பர் 47’ (ஏகே 47) என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடியாக தெலுங்கு திரைப்படத்தில் முதன்முறையாக யோகி பாபு நடிக்கும் படம் இதுவாகும். இதற்கு முன்னதாக அவர் மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ திரைப்படத்தில் குறுகிய நேரம் தோன்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
