ரப் நோட் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காட்ஸ் அண்ட் ஜோல்ஜர்ஸ்’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுணன் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர் பரத், நடிகை அம்மு அபிராமி மற்றும் நடிகர் கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது, நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு தனது நன்றியை தெரிவித்தார். இந்த திரைப்படம் அனைவரிடமிருந்தும் அதிகமான உடல் உழைப்பையும் முழு நேர்மையையும் எதிர்பார்த்ததாகவும், அதனை அனைவரும் எல்லைகளைத் தாண்டி செய்து காட்டியதாகவும் அவர் கூறினார். திரையில் பதிவு செய்யப்பட்ட அந்த ஆற்றல் பார்வையாளர்களுடன் வலுவாக இணையும் என்ற நம்பிக்கையும் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
