மலையாள திரையுலகின் மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான அடூர் கோபாலகிருஷ்ணன், தனது 86வது வயதிலும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். ‘படயாத்ரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் மம்முட்டி மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவருக்கான தேவை அதிகமாக இருந்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்குச் சென்று அங்கு ஒரு எளிய வீட்டுடன் இணைந்த மருத்துவமனை அமைத்து பணியாற்றும் மருத்துவராக அவர் இந்த படத்தில் தோன்றுகிறார்.
பல நோயாளிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்காமல், அருகில் ஒரு உண்டியல் வைத்து அவர்களால் முடிந்த அளவு தொகையை அதில் செலுத்தச் சொல்வது போன்ற மனிதநேயத்துடன் கூடிய கதாபாத்திரம் இது. தமிழ்நாட்டில் ‘ஐந்து ரூபாய் டாக்டர்’ என்று அழைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் மரியாதை பெற்ற சென்னை வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன் போன்றவரை நினைவூட்டும் வகையில் மம்முட்டியின் இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
