‘வந்தே மாதரம்’ பாடலின் 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை சார்பில் 6,500 கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரம்மாண்ட கடற்கரை மிதிவண்டி மரத்தான் நடத்தப்படுகிறது. குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் தொடங்கிய இந்த மரத்தான், தமிழகம் உட்பட ஒன்பது மாநிலங்களை கடந்து பிப்ரவரி 22ஆம் தேதி கொச்சியில் நிறைவடைகிறது.
கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் மற்றும் தண்ணீர் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மரத்தான் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற வீரர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்று கவுரவிக்கும் நிகழ்ச்சி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், நடிகர்கள் உண்மையான ஹீரோக்கள் அல்ல என்று தெரிவித்தார். நம் நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களே உண்மையான ஹீரோக்கள் எனக் கூறினார். கடல் வழியாக போதைப் பொருட்கள் ஊடுருவுவதை தடுக்க காவல்துறை மற்றும் அதிகாரிகள் மட்டுமே முயற்சி செய்தால் போதாது, பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தற்போது போதைப் பழக்கத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், மாணவர்கள் தவறான பாதையில் செல்லாமல் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அதற்கு பெற்றோரும் ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்து வழிகாட்ட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
