நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ‘டான்’ திரைப்படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்-ஐ போஸ்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில், கார் பழுது பார்க்கும் பணிமனை ஒன்றில் பழைய வகை கார் நிறுத்தப்பட்டிருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால், இந்த திரைப்படத்தின் கதை 1960களின் பின்னணியில் அமையக்கூடும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் அல்லது காணொளி வருகிற 21ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் இன்று இரவு 7.12 மணிக்கு வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை குறிக்கும் நவம்பர் 7ம் தேதி மற்றும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை குறிக்கும் டிசம்பர் 12ம் தேதியை குறிக்கும் வகையில் 7.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் குறித்த அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த பணிகள் நிறைவடைந்ததும், மார்ச் மாதம் முதல் சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
