‘கயல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வின்சென்ட் மற்றும் டி.ஜே. பானு நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அந்தோனி’ ஆகும். யாழ்ப்பாணம் கடற்கரை பின்னணியையும், மீனவர்கள் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன் மற்றும் சவுமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக, நேற்று படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விழாவில் பேசிய நடிகர் வின்சென்ட், “நான் ஈழத்தமிழர், தற்போது நார்வேயில் வசித்து வருகிறேன். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தில் நடித்தேன். அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். டி.ஜே. பானு இந்த படத்தின் கதாநாயகி. எங்களுக்காக அவர் 50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட ஒரு தெலுங்கு திரைப்பட வாய்ப்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்து நடித்தார்.
இளையராஜா போன்ற மகத்தான இசையமைப்பாளர் எங்கள் படத்திற்கு இசையமைத்தது மிகப்பெரிய பாக்கியம். இலங்கையைச் சேர்ந்த பலர் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இலங்கையிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றால், இலங்கையில் இருந்து மேலும் பல தமிழ் திரைப்படங்கள் உருவாகும்,” என்று தெரிவித்தார்.
