தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவும், ரவுடி பிக்சர்ஸும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கற்பனை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அனிருத் இசையில் முன்னதாக வெளியான ‘தீமா’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அதன் பின்னர் வெளியான ‘பட்டுமா’ என்ற இரண்டாவது பாடலும் ரசிகர்களை ஈர்த்த நிலையில், 2040ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு கண்ணைக் கவரும் உலகில் கதை நடைபெறுவதாக வெளியான முன்னோட்ட வீடியோ ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில், திரைப்படத்தில் இடம்பெறும் ‘எனக்கென யாருமில்லையே’ என்ற காணொளிப் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் 2015ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ‘எனக்கென யாருமில்லையே’ பாடல் ‘ஆக்கோ’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
