சசிகுமார் நடித்த ‘கருடன்’, ‘நந்தன்’ திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜப்பான்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் உருவான ‘மை லார்ட்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். மேலும், குரு சோமசுந்தரம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் சமூகத்தின் அடிப்படை சிக்கல்களை நேர்மையாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்கும் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மனித உறவுகள், நீதிக்கான போராட்டம் மற்றும் சமூக அமைப்பின் மறுபக்கங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது என்று கூறப்படுகிறது.
நேற்று திரையரங்குகளில் வெளியான ‘மை லார்ட்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதையடுத்து, அதன் விநியோகஸ்தரான நடிகர் சூர்யா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
