‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குவதற்காக முன்பு சுந்தர்.சி ஒப்பந்தமாகியிருந்த நிலையில், சில காரணங்களால் அவர் அந்த பொறுப்பிலிருந்து விலகினார். இதற்கு முன்பே ரஜினிகாந்த் படத்தை இயக்குவதாக பேசப்பட்ட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, தற்போது எதிர்பாராத விதமாக இந்த ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ‘குருவி தலையில் பனங்காய்’ என்பதுபோல் கிடைத்த இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி, ரஜினி படத்தை வெற்றிகரமாக உருவாக்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சமீபத்தில் ‘வித் லவ்’ என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிபி சக்கரவர்த்தி, அங்கு பேசுகையில், “தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுதான். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, நான் எதிர்பாராத பல இடங்களிலிருந்து எனக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் வந்து கொண்டிருக்கின்றன” என தெரிவித்தார்.
மேலும், ‘வித் லவ்’ திரைப்பட விழாவில் அவர் பேசும்போது, ரஜினி ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தாம் அளிக்கும் வாக்குறுதியாக, தலைவர் 173 திரைப்படத்தை பார்த்துவிட்டு, நீங்கள் திரையரங்குகளை முழு திருப்தியுடன் விட்டு வெளியேறுவீர்கள் என்பதை உறுதியாக கூறுகிறேன். மீண்டும் சொல்கிறேன், இது என்னுடைய வாக்குறுதி” என்று வலியுறுத்திக் கூறினார்.
