திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து அறிக்கை!

தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சில தினங்களுக்கு முன் சிறப்பு இசைக்கச்சேரி நடைபெற்றது. அதன் பின்னர், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “கால் நூற்றாண்டு காலக் காட்சிகளும் உணர்வுகளும்: திரைப்படம் என்பது வெறும் அசைவு படங்களை பதிவு செய்வது மட்டுமல்ல, அது காலத்தையே பதிவு செய்வது என்று அடிக்கடி சொல்லப்படுவதை நான் உணர்ந்தேன். நான் முதன்முதலில் ‘ஆக்ஷன்’ என குரல் கொடுத்த நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு அடைவதை குறிக்கும் இந்த தருணத்தில், கடந்து போன காலத்தால் அல்ல, அந்த காலம் எனக்கு வழங்கிய நினைவுகளின் பெருக்கத்தால் நான் திக்குமுக்காடி போகிறேன். இந்த சவால்கள் நிறைந்த, அற்புதமான துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து வருவது தனிப்பட்ட சாதனை அல்ல; அது என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் உருவான கலைப்படைப்பு ஆகும்.

எனது ஆழ்ந்த நன்றியும் அன்பும் கலைஞர்களுக்கே உரித்தானது: என் மனதில் உருவான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நடிகர்களே. உங்கள் நடிப்பால் நான் கற்பனை செய்ததைச் சாதனையாக மாற்றியீர்கள்; பல சமயங்களில், நீங்கள் கதாபாத்திரங்களில் நான் உணராத ஆழங்களை கண்டறிந்தீர்கள். என் படக்குழுவினருக்கு: இருபத்தைந்து ஆண்டுகளாக என் கற்பனைக்கு ஆதாரமாக கேமராவுக்கு பின்னால் நின்ற உங்களுக்கான என் நன்றியும் மரியாதையும், சினிமாவைப் பற்றிய என் அன்பைப் போல ஆழமானது.

நான் ஜாம்பவான்களின் தோள்களுக்குப் பின் நிற்கிறேன்; என் தொடக்க கால படிகளுக்கும், எனக்கு வழிகாட்டியவர்களுக்கும், என் சமகால இயக்குநர்களுக்கும் நன்றி. உங்கள் படைப்புகள் எனக்கு தினமும் சவால் மற்றும் உத்வேகத்தை அளிக்கின்றன. கதை சொல்லும் இந்த பொதுவான பயணத்தில் நாம் பகிர்ந்த தோழமை விலைமதிப்பற்றது.

இறுதியாக, என் அன்பான ரசிகர்களுக்கு: நீங்கள் என் கதைகளை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டீர்கள், என் கதாபாத்திரங்களை உங்கள் உரையாடல்களில் வாழ அனுமதித்தீர்கள். நான் சித்தரிக்க முயன்ற அன்பு, மோதல்கள் மற்றும் வாழ்க்கையின் பல பரிமாணங்களை நீங்கள் தழுவிக்கொண்டீர்கள். உங்கள் அங்கீகாரமே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. #YennoduVaaVeeduVaraikkum இசை நிகழ்ச்சியில் ஒரு மறக்க முடியாத இரவை வழங்கியதற்கு நன்றி. எனது சினிமாவுடனான காதல் பயணம் தொடர்கிறது. அடுத்த காட்சி காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading