தெலுங்கு திரையுலக இயக்குநரும் நடிகருமான தருண் பாஸ்கர் மற்றும் நடிகை ஈஷா ரெப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் நகைச்சுவை திரைப்படம் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’. இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். சஜீவ் இயக்கியுள்ளார். வருகிற 30 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், நடிகை ஈஷா ரெப்பா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்த படத்தில் அடிக்கும் காட்சிகள் பல இடம்பெறும் என்பது எனக்கு முன்பே தெரியும். அந்த காட்சிகள் இயல்பாகவும், தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் வர வேண்டும் என்று இயக்குநர் விரும்பினார். ஒரு காட்சியில் தருண் பாஸ்கர் கையில் சட்னியுடன் என்னை உண்மையாகவே அறைந்தார். அந்த காட்சி முடிந்த பிறகு, நான் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அழுதேன்” என்று தெரிவித்துள்ளார். நடிகையின் இந்த அனுபவப் பகிர்வு தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
