‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ‘டிசி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி வருகிறார். அந்தப் படத்தின் பணிகள் முடிந்ததும், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 23வது படத்தை அவர் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், ஆயிரம் விமர்சனங்களை தாண்டியும் ‘கூலி’ படம் ஓடியதற்கு மக்களுக்கு முதலில் என் நன்றி. ‘கூலி’ படத்துக்கு வந்த விமர்சனங்களை நான் ஆராய்ந்து பார்த்தேன். என்னிடமிருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளேன். இனிமேல் விமர்சனங்களுக்கு இடமளிக்காத வகையில் படங்களை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
‘கூலி’ படம் வெளியான பிறகு, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்காக ஒரு நல்ல கதையை எழுதி, இருவரிடமும் தனித்தனியாக சென்று கதை சொன்னேன். ஆனால், தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், அவர்கள் இருவரும் வேறுபட்ட ஒரு யதார்த்தமான கதையை யோசித்தார்கள். அந்த மாதிரியான படம் எனக்கு செய்வது சாத்தியமில்லை என்று சொல்லி அந்த முயற்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதே நேரத்தில், எனக்கு ‘கைதி 2’ படமும் இருந்தது. ஆனால், அந்த படத்துக்காக ஒதுக்கியிருந்த தேதியை கார்த்தி மற்ற படங்களுக்கு கொடுத்துவிட்டார்” என்று விளக்கினார்.
அதற்கிடையில், மைத்ரி பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தது. அதனால், அவர்களுடன் படம் செய்ய முடிவு செய்து, அவர்கள் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் உறுதியானது. ‘கைதி 2’ படத்துக்கு அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுவது வெறும் வதந்தி. ‘எல்சியு’ (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) மூடப்படவில்லை; உண்மையில், இப்போது தான் அது முழுமையாக தொடங்குகிறது. ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ போன்ற படங்களை இயக்காமல் என்னால் போக முடியாது. இனி, எல்சியு சம்பந்தப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளிவரும். மேலும், அமீர்கானுடன் இணைந்து ஒரு படம் இயக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.
விமர்சனங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும், பாராட்டுகளை ஏற்றுக் கொள்வதைப் போலவே விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறினார். தனது மீதான விமர்சனங்களை அக்கறையாகவே பார்க்கிறேன் என்றும், ‘டிசி’ படத்திற்கு பிறகு நடிகராக அல்ல, இயக்கத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார். சமூக ஊடகங்களையும், அதில் வரும் எதிர்மறை விமர்சனங்களையும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளேன். அதுகுறித்த மற்ற விவரங்களை அந்தப் படத்தின் இயக்குனர் எச். வினோத்திடம் தான் கேட்க வேண்டும். ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. அந்த படத்திற்கு சென்சார் போர்டு 35 காட்சிகளை நீக்க சொல்லியது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. சினிமாவில் வன்முறையை நான் வன்முறையாக அல்ல, ஆக்ஷனாகவே பார்க்கிறேன். என் படங்களில் வன்முறை இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எனக்கு சமூக பொறுப்பு உள்ளது; அதேபோல் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்க வேண்டும் அல்லவா” என்று கூறினார்.
மேலும், “அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. விஜய்யின் அரசியல் பிரச்சாரத்திற்கும் நான் செல்ல மாட்டேன். ‘கூலி’ படம் 35 நாட்களுக்கு மேல் ஓடி, லாபகரமான படமாக அமைந்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினி, கமல் இருவரையும் சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்துவிட்டேன் என்று சிலர் விமர்சித்தனர். ஆனால், இருவருடனும் இணைந்து படம் செய்ததே ஒரு பெரிய பாக்கியம். அப்படியிருக்கையில், அவர்களை நான் எப்படி அன்பாலோ செய்வேன்? அதில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன், என்னிடமோ அல்லது என் குழுவினரிடமோ கேட்டு உறுதி செய்து வெளியிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
போதைப் பொருட்களுக்கு எதிராக என்னால் முடிந்த அளவிற்கு உரக்க குரல் கொடுத்து வருகிறேன். போதைக்கு எதிரான விழிப்புணர்வையும் தொடர்ந்து செய்து வருகிறேன். என் படங்களில் போதைப் பொருள் காட்சிகள் இருப்பதால் சமூகத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றால், அதை நிறுத்துவதால் மாற்றம் ஏற்படும் என்றால், நானும் அதை நிறுத்தத் தயாராக இருக்கிறேன் என்றுள்ளார் லோகேஷ் கனகராஜ் .
