நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்த 2024-ம் ஆண்டு வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மெகா வெற்றியை பெற்றது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், ‘கல்கி 2’ படம் குறித்து சமீபத்தில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “கல்கி 2 என் வாழ்க்கையில் மிகச் சிறந்த படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகுந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ‘கல்கி 2898 ஏடி’ எங்கள் அனைவருக்கும் ஒரு மெகா கற்றல் அனுபவமாக அமைந்தது. தற்போது கல்கி 2 படத்திற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். இந்த படத்தில் நடிக்கும் அனைவரும் முன்னணி, மெகா நடிகர்களாக இருப்பதால், அவர்களின் கால்ஷீட்டுகளை ஒருங்கிணைத்து இயக்குநர் பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நாயகனாக நடித்த முதல் பாகத்தில், கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்திலும், அமிதாப் பச்சன் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர். அந்த நிலையில், முதல் பாகத்தில் நடித்த அதே கதாபாத்திரங்களையே இரண்டாம் பாகத்திலும் அவர்கள் தொடர்ந்து நடிக்க உள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை வைஜெயந்தி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
