‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றவர் லோகேஷ் கனகராஜ். அவரது இரண்டாவது படமாக கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று பல்வேறு தருணங்களில் நடிகர் கார்த்தியும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தெரிவித்திருந்தனர். ஆனால், அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ ஆகிய படங்களை இயக்கி முடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் 23வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் சமீபத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பில், கார்த்தியிடம் ‘கைதி 2’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அது குறித்து லோகேஷ் தான் சொல்ல வேண்டும் என்று அவர் பதிலளித்துள்ளார். இதனால் ‘கைதி 2’ உருவாகுமா இல்லையா என்று ரசிகர்களிடையே மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
