பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் ஒரு ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், “கடந்த எட்டு ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் இருந்து எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை தற்போது சமூக அடிப்படையிலானதாக மாறியுள்ளது. இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே இன்று அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக உள்ளனர். இது சமூக சார்ந்த விஷயமாகவும் இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் வெளியானதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் ஏ.ஆர். ரஹ்மானின் இந்தக் கருத்துகளை எதிர்த்து விமர்சனம் செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில், தனது சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், “ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், அதை கொண்டாடுவதற்கும், கவுரவிப்பதற்கும் எப்போதும் எனது வழியாக இசை இருந்து வருகிறது. இந்தியா எனது உத்வேகம், எனது ஆசிரியர், எனது வீடு. சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், எப்போதும் இசையின் மூலம் கவுரவித்தல் மற்றும் சேவை செய்வதே எனது நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் ஒருபோதும் யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை. எனது நேர்மை உணரப்படும் என்று நம்புகிறேன். இந்தியனாக இருப்பதை ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கும், பன்முக கலாசார குரல்களை கொண்டாடும் ஒரு இடத்தை உருவாக்க இந்த நாடு எனக்கு உதவுகிறது. இசை வாழ்க்கையின் ஒவ்வொரு பயணமும் எனது இலக்கை நிறைவேற்ற உதவுகிறது. இந்த நாட்டிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன். கடந்த காலத்தை மதிக்கும், நிகழ்காலத்தை கொண்டாடும், எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கு உறுதியளிக்கிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்” என்று ஏ.ஆர். ரஹ்மான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
