கிச்சா சுதீப் நடித்த ‘மார்க்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் நடிகை தீப்ஷிகா சந்திரன். ‘மார்க்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதில் தீப்ஷிகா சந்திரனின் நடிப்பும் அழகும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக அவரது திரை வெளிப்பாடு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘மார்க்’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய தீப்ஷிகா சந்திரன், “என் மீது நம்பிக்கை வைத்து, என் நடிப்பு திறமைக்கு வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயா, கதாபாத்திரத்தை தெளிவாக விளக்கி, சரியான வழிகாட்டுதல்களை வழங்கியதால் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாள முடிந்தது” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “கிச்சா சுதீப்பின் ஊக்கமும், சக நடிகராக அவர் காட்டிய அக்கறையும் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் முழு ஆதரவு அளித்தது. அர்த்தமுள்ள கதைகள்தான் நடிகர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும். அப்படியான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
