வெளிநாட்டில் நடைபெறும் ‘சூர்யா 48’ படப்பிடிப்பு?குறித்து வெளியான புதிய தகவல்!

‘ஜெய்பீம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் டி.ஜே. ஞானவேலுடன் சூர்யா மீண்டும் கைகோர்த்துள்ளார். தற்போது உருவாகி வரும் இந்தப் படம், சூர்யாவின் 48-வது திரைப்படமாகும். ஏற்கெனவே ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றுள்ள இந்தக் கூட்டணியின் புதிய படப்பிடிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து ஒரு வாரம் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்ததாக பாங்காக்கிற்குச் செல்லவுள்ளது. அங்கும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வரும் படக்குழு, மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்து ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, பிரகாஷ் ராஜ், எலங்கோ குமரவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம், அதிரடி மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்துடன் உருவாகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் வெளியாகும் பான் இந்தியா படமாக இது தயாராகி வருகிறது.

Add a Comment

Leave a Reply