‘JOCKEY’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

மதுரை பகுதியில் ஆட்டோ டிரைவராக வாழ்ந்து வரும் ஹீரோ யுவன் கிருஷ்ணாவுக்கும், அதே பகுதியில் தொழிலதிபராக இருக்கும் ரிதன் கிருஷ்ணாவுக்கும் இடையே, கிடாய் சண்டை போட்டியின் காரணமாக பகை உருவாகிறது. யாராலும் வெல்ல முடியாததாக கருதப்பட்ட ரிதனின் கிடாயை, யுவனின் கிடாய் தோற்கடிக்கிறது. அந்த தோல்வி மற்றும் அவமானம் ரிதனை கடும் கோபத்திற்குள் தள்ளுகிறது. அதன் பின்னர், மீண்டும் அவர்கள் இருவரும் களத்தில் மோதுகின்றனர். இறுதியில் யாரின் கிடாய் வெற்றி பெறுகிறது, ஒரு போட்டி எந்த அளவிற்கு பெரிய பகையையும் பிரச்னைகளையும் உருவாக்குகிறது என்பதையே, இதுவரை யாரும் சொல்லாத கிடாய் சண்டை பின்னணியில், மாறுபட்ட களத்தில் இயக்குனர் பிரபகல் இந்தப் படமாக உருவாக்கியுள்ளார். இதற்கு முன்பு இவர் இயக்கிய ‘மட்டி’ என்ற கார் ரேஸ் படம், தமிழ் சினிமாவில் பேசப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கிடாய் வளர்க்கும் இரண்டு பேர், அவர்களை ஆதரிக்கும் குழுக்கள் மற்றும் இரண்டு கிடாய்களுக்கிடையே நடக்கும் மோதல்தான் இந்தக் கதையின் மையம். மதுரை மண்ணின் வாசனையுடன், அந்த பகுதியில் தங்கி நிறைய ஆய்வு செய்து, நடிகர்களுக்கும் கிடாய்களுக்கும் சிறப்பான பயிற்சி அளித்து, ஒரு அழுத்தமான படமாக இதை இயக்குனர் உருவாக்கியுள்ளார். ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற விளையாட்டுகளை மையமாக வைத்து முன்பே சில படங்கள் வந்திருந்தாலும், தமிழ்சினிமாவில் கிடாய் சண்டையை இந்த அளவுக்கு ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துச் சொன்ன படம் இதுவரை இல்லை என்பதே இந்தப் படத்தின் முக்கிய அம்சமாகும். பாலக்காட்டைச் சேர்ந்த இயக்குனர் பிரபகல் மற்றும் அவரது குழு, இந்தக் கலாச்சாரத்தை விரிவாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆட்டோ டிரைவராக வரும் யுவன் கிருஷ்ணா தோற்றத்தில் கொஞ்சம் கரடுமுரடாகத் தெரிந்தாலும், அவரது நடிப்பு மென்மையாக உள்ளது. மதுரை ஸ்லாங் பேசிக்கொண்டு அவர் செய்யும் அலப்பறைகள், கிடாய் மீது வைத்திருக்கும் பாசம், கிடாய் சண்டையில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் புதுமையாகவும் இயல்பாகவும் இருக்கின்றன. குறிப்பாக, வில்லனுடன் மோதும் காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுகின்றன. ஆனால், அம்மு அபிராமியுடன் வரும் காதல் காட்சிகளில் அவரது நடிப்பு பெரிதாக செட்டாகவில்லை.

வில்லனாக நடித்துள்ள ரிதன் கிருஷ்ணா, போட்டியில் தோற்றதன் பின்னர் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்தி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். கிடாய் சண்டை நடக்கும் தருணங்களிலும், தனிப்பட்ட பழிவாங்கும் சம்பவங்களிலும் அவர் வெளிப்படுத்தும் கோபம் கலந்த கேரக்டர் கதைக்கு வலு சேர்க்கிறது. கிடாய் சண்டையை நடத்தும் பெரிய மனிதராக வரும் மதுசூதன் ராவ், யுவன் அணியில் இருக்கும் சித்தன், கேபிஓய் யோகி ஆகியோர் நடித்த கேரக்டர்கள், மதுரை பாசக்கார மக்களை நினைவுபடுத்துகின்றன.

ஹீரோவின் அக்காவாக நடித்த சரண்யா ரவிச்சந்திரன் சில காட்சிகளில் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அம்மு அபிராமி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் பெரிதாக வேலை செய்யவில்லை. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதும், அங்குள்ள பொதுமக்கள் பலர் காட்சிகளில் இடம்பெற்றதும், படத்திற்கு இயல்புத்தன்மையை கூட்டி கவனம் ஈர்க்கிறது.

கிடாய் சண்டை நடக்கும் களம், போட்டியின் விதிமுறைகள், கிடாய்களின் ஆக்ரோஷம், பரிசு மற்றும் அதனால் ஏற்படும் கவுரவம், போட்டியால் உருவாகும் பகை மற்றும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் புதுமையாக இருப்பதால், “இப்படியெல்லாம் தமிழகத்தில் நடக்கிறதா?” என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதை விறுவிறுப்பாக படமாக்கிய விதமும், படத்தின் மூலம் சொல்லப்பட்ட தகவல்களும் பாராட்டத்தக்கவை. மதுரை ஸ்லாங் ஓரளவு சரியாக பொருந்தியுள்ளது. போட்டி மற்றும் சண்டை காட்சிகளை விறுவிறுப்பாக பதிவு செய்துள்ளது என்.எஸ். உதயகுமாரின் கேமரா. சக்தி பாலாஜியின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டம் அளிக்கிறது. கிடாய் போட்டி மைதானம், ஹீரோவின் வீடு போன்ற அமைப்புகள் ஆர்ட் டைரக்டரின் திறமையை வெளிப்படுத்துகின்றன.

ஹீரோ, வில்லன் மற்றும் பிற கேரக்டர்களைத் தவிர, இந்தப் படத்தில் கிடாய்களே மிகச் சிறப்பாக ‘நடித்துள்ளன’ என்று சொல்லலாம். ஹீரோ வளர்க்கும் கிடாய், வில்லனின் இரண்டு கிடாய்கள் ஆகியவை களத்திற்கு வரும் தருணங்கள், அவற்றை இருவரும் பாசமாக வளர்ப்பது, கட்டாரியின் சைகையை கேட்டு போட்டியில் ஆக்ரோஷமாக மோதுவது ஆகிய காட்சிகள் நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. கிடாய்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் விலங்குகளை நேசிப்பவர்களை நிச்சயம் உருக்கும்.

ஆனால், ஹீரோ மற்றும் வில்லனின் உருவ அமைப்பு மற்றும் கெட்டப் மதுரை பகுதிக்குப் பொருந்தாதது போல தெரிகிறது. அவர்களின் தோற்றத்தில் மேலும் மாற்றங்கள் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. அதேபோல், ஹீரோவின் டயலாக்குகளை குறைத்து, நடிப்பை அதிகரித்திருக்கலாம். சில முக்கியமான காட்சிகளில் கூட ஹீரோவின் நடிப்பு மற்றும் டப்பிங் டோன் மைனஸாக அமைந்துள்ளது. வில்லனின் சில இடங்களில் ஓவர் வில்லத்தனமும் சற்றே எரிச்சலை தருகிறது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். இருந்தாலும், தமிழ்சினிமாவில் இதுவரை யாரும் பதிவு செய்யாத ஒரு புதிய களத்தை தேர்வு செய்து, அதற்காக இயக்குனர் எடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. மாறுபட்ட சினிமாவை விரும்பும் பார்வையாளர்களுக்கு, இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading