ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யாவின் ழகரம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில், நஸ்ரியா, நஸ்லன், லால், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் டொவினோ தாமஸும் ‘விக்டர்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார். இந்நிலையில், இப்படத்தில் பங்கேற்ற டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாளத் திரையுலகக் கலைஞர்களுக்கு சூர்யா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், “அன்புள்ள டொவினோ, எங்கள் படத்தில் விக்டராக நடித்ததற்காக உங்களுக்கு நன்றி சொல்வதற்கு சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை. அளவற்ற அன்புடனும் பெருந்தன்மையுடனும் இந்தப் படத்தில் நீங்கள் இணைந்தது என்னை விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ வைத்துள்ளது. அதேபோல், ‘சீன்’ படத்தில் எங்களுடன் பணியாற்றிய மலையாளத் திரையுலகைச் சேர்ந்த துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படைப்பாளிகள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மலையாள சினிமா மீதான எங்களது அன்பை வெளிப்படுத்தும் சிறிய கடிதமாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ திரைப்படம், இதுவரை ரூ.205 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் படக்குழு தெரிவித்துள்ளது.
