தனது காதலி சித்தி இட்னானியை சந்திக்க புதுச்சேரிக்கு வரும் அருண் விஜய், தன்னைப் போலவே உருவத்தில் இருக்கும் இன்னொரு அருண் விஜயை பார்த்து அதிர்ச்சியடைகிறார். காதலியின் பேச்சைக் கேட்டு, பண ஆசையில் அவனை கொலை செய்துவிட்டு, அவனாகவே மாறுகிறார். இதற்கிடையில், கோவாவிலிருந்து ஒரு கும்பல், கொல்லப்பட்ட அந்த அருண் விஜயை தேடி ‘கொல்ல’ புதுச்சேரிக்கு வருகிறது. காரணம், கோவாவில் வில்லன் ஹரீஷ் பெரடியின் மகனை அந்த அருண் விஜய் கொலை செய்ததாக அவர்கள் நம்புகின்றனர். ஆள் மாறாட்டம் நடந்த உண்மை தெரியாமல், இப்போது வேறு ஒருவனாக மாறிய இந்த அருண் விஜயை அவர்கள் துரத்துகிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் அதிகாரி ஜான் விஜயும் அருண் விஜயை பின் தொடர்ந்து கண்காணிக்கிறார். இதனிடையே மேலும் சில சம்பவங்களை இந்த அருண் விஜய் செய்து விட, இறுதியில் யார் யாரை கொன்றார்கள், யார் தப்பித்தார்கள் என்பதையே ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் கதையாக சொல்லியுள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த காளி, கோவாவை சேர்ந்த உபேந்திரா என இரட்டை வேடங்களில் அருண் விஜய் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் அண்ணன்–தம்பி அல்ல என்பதும், முன்பு எந்த தொடர்பும் இல்லாதவர்கள் என்பதும் கதையின் முக்கியமான ஆறுதலான அம்சமாக அமைந்துள்ளது. ஒரே முகம் இருந்தாலும், வாழ்க்கை பாதைகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதை திரைக்கதை தெளிவாக காட்ட முயல்கிறது.
காளி தனது காதலிக்காக வாழ்க்கையில் தவறான பாதையைத் தேர்வு செய்கிறார்; உபேந்திரா தனது தாயின் மீது கொண்ட அளவில்லா பாசத்தால் தடம் மாறுகிறார். அந்த வகையில் இருவருமே முழுமையாக நல்லவர்களும் இல்லை, முழுமையாக கெட்டவர்களும் இல்லை. சுயநலத்திற்காக தவறு செய்வதில் இருவருக்கும் போட்டியே நடக்கிறது. ஒருவர் செய்த கொலைக்கு இன்னொருவர் அந்த இடத்தை நிரப்புவது என கதையின் ஓட்டம் மாறுபட்ட கோணத்தில் பயணிக்கிறது. ஆனால் படம் தொடங்கிய தருணம் முதல் இறுதிவரை ஆக்ஷன் காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒரு சண்டை அல்லது ஒரு கொலை காட்சி இடம்பெறுகிறது. இரண்டு அருண் விஜய்களும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர். ஆனால் குண்டு காயம், கத்திக் குத்து, மரண அடி போன்றவற்றை சந்தித்த பிறகும், எந்த சிரமமும் இல்லாமல் உடனடியாக எழுந்து மீண்டும் அதிரடியாக சண்டையிடுவது பல லாஜிக் குறைபாடுகளை உருவாக்குகிறது. ஹீரோயிசத்தை உயர்த்துவதற்காக பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அருண் விஜய் முழு ஈடுபாட்டுடன் நடித்தும், சண்டை காட்சிகளில் பங்கேற்றும் இருக்கிறார். இருப்பினும், அவர் ஒரே நேரத்தில் ஹீரோவும் வில்லனுமாக இருப்பது கதைக்கு முழுமையாக பொருந்தவில்லை.
பணத்தாசை கொண்ட கதாபாத்திரமாக சித்தி இட்னானி சித்தரிக்கப்படுகிறார். புதுச்சேரி பின்னணியில் பணத்திற்காக அவர் மாறும் காட்சிகளில் அவரது நடிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஒரு பாடல் காட்சியில் அவர் அழகாக தோன்றுகிறார். ஆனால் அவரது கதாபாத்திர வடிவமைப்பு தெளிவில்லாமல் குழப்பமாக உள்ளது; அதனால் அந்த பாத்திரம் மனதில் பதியவில்லை. இன்னொரு அருண் விஜயின் காதலியாக தீவ்ரா வருகிறார். குறைந்த காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், அவரது நடிப்பு சராசரியாக அமைந்துள்ளது. அருண் விஜயால் கொல்லப்படும் பாலாஜி முருகதாஸின் மனைவியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரமும் நடிப்பும் சில இடங்களில் மிகைப்படுத்தலாக இருந்தாலும், கிளைமாக்சில் அவர் செய்யும் சம்பவம் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜயின் கதாபாத்திரமும், அவரது வழக்கமான ஓவர் ஆக்டிங் நடிப்பும் படத்திற்கு பெரிய மைனஸாக அமைந்துள்ளது. குறிப்பாக இரட்டை அர்த்த வசனங்களுடன் அவர் செய்யும் செயல்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கின்றன. மற்றொரு வில்லனாக வரும் ஹரீஷ் பெரடி, முன்பு பார்த்த அதே மாதிரியான நடிப்பைத் தான் இங்கும் வழங்குகிறார். அவரது கூட்டாளியாக வரும் யோகேஷ் சாமியும் சில இடங்களில் சண்டையிடுகிறார். படத்தில் பல வில்லன்கள் இருந்தாலும், யாருமே தனிப்பட்ட முறையில் மனதில் பதியவில்லை.
‘ரெட்ட தல’ திரைப்படத்தின் முக்கியமான பிளஸ் அம்சம் டிஜோ டாமியின் ஒளிப்பதிவு. சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை நினைவூட்டும் வகையில் பிரமாண்டமாகவும் தெளிவாகவும் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெரும்பாலான காட்சிகள் இரவில் நடைபெறும் நிலையில், அவற்றை அழகாகவும் தாக்கம் கொண்டதாகவும் கேமரா பதிவு செய்துள்ளது. சாம் சி.எஸ். பின்னணி இசையை ரசிக்கத்தக்க வகையில் அமைத்துள்ளார். தனுஷ் குரலில் வரும் ‘கண்ணம்மா’ பாடல் இனிமையாக உள்ளது. ஒருவன் கெட்டவன், இன்னொருவன் அதைவிட கெட்டவன் என்ற கோணத்தில் ஆள் மாறாட்டம் கதையாக படம் நகர்ந்தாலும், ஒரே நேர்கோட்டில் பயணிக்க முயல்வதில் சிறிது தடுமாற்றம் தெரிகிறது. ஆக்ஷன், சற்று காதல், சென்டிமென்ட் ஆகியவை கலந்த ஒரு சராசரி அனுபவமாக ‘ரெட்ட தல’ அமைந்துள்ளது.
