Monday, December 16, 2024

‘புஷ்பா 2’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படத்தில், சாதாரண கூலியாக பணியாற்றிய அல்லு அர்ஜுன், செம்மரக் கடத்தல் சிண்டிகேட்டின் தலைவராக உயர்ந்துவரும் பயணத்தை கதையாகக் காட்டினார்கள். அந்தச் சிண்டிகேட்டின் நடவடிக்கைகளை தடுக்க வரும் எஸ்.பி. பஹத் பாசிலுடன் அல்லு அர்ஜுனுக்கு ஆரம்பமாகும் மோதலுடன் முதல் பாகம் நிறைவடைந்தது.

இந்த இரண்டாம் பாகத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் பஹத் பாசிலின் மோதல் தொடர்ந்து ஒரு பக்கம் நிகழ்ந்தாலும், மாநில முதல்வரையே மாற்றும் அளவுக்கு உயர்ந்து வரும் அல்லு அர்ஜுனின் அதிகார வளர்ச்சியை கதையாக அமைத்திருக்கிறார்கள்.முதல்வராக இருக்கும் ஆடுகளம் நரேனை சந்திக்கும் போது, ரஷ்மிகா மந்தனா தனது கணவர் அல்லு அர்ஜுனுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், “கடத்தல்காரனுடன் புகைப்படம் எடுப்பதா?” என நரேன் மறுக்கிறார். இதனால் கோபமடைந்த அல்லு அர்ஜுன், தனது சிண்டிகேட்டில் ஒருவரான எம்.பி ராவ் ரமேஷை முதல்வராக்கப் போராட்டம் தொடங்குகிறார். இதற்காக 2000 டன் செம்மரங்களை கடத்தும் செயல்முறையை தொடங்குகிறார். அந்த முயற்சி வெற்றியடைந்ததா? ராவ் ரமேஷை முதல்வர் ஆக்கினாரா? என்பது இந்த இரண்டாம் பாகமான ‘புஷ்பா – தி ரூல்’ படத்தின் மையக் கதை.

முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனின் சாதாரண வாழ்க்கை, ரஷ்மிகாவுடன் உள்ள காதல், படிப்படியான வளர்ச்சி மற்றும் கடத்தல்காரர்களுடன் மோதல்களாக கதை நகர்ந்தது. ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் அதிகார வளர்ச்சி, ரஷ்மிகாவுடன் கணவன்-மனைவி பாசம், மாநில முதல்வரைக் கூட மாற்றும் வல்லமையுடன் குடும்ப சென்டிமென்ட் என இயக்குநர் சுகுமார் முழுமையான கமர்ஷியல் மசாலாவை சேர்த்திருக்கிறார்.

முதல் பாகத்தைவிடவும் இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் ஹீரோயிசம் மிக அதிகமாக வெளிப்படுகிறது. சண்டைக் காட்சிகள் தெலுங்கு சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிரடியாக அமைந்துள்ளன. புஷ்பா கதாபாத்திரத்தில், மனைவியிடம் ‘பிளவர்’ ஆகவும், பஹத் பாசிலுடன் ‘பயர்’ ஆகவும், எம்.பி, முதல்வர், மத்திய அமைச்சர் போன்ற அரசியல்வாதிகளுடன் ‘வைல்டு பயர்’ ஆகவும் சக்திவாய்ந்த தன்மையை வெளிப்படுத்துகிறார்.

முதல் பாகத்தில் சிறிது நேரமே தோன்றிய பஹத் பாசில், இந்த இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக உருவாகியிருக்கிறார். அவருக்கான முடிவு நிறைவடையாமல் இருந்தாலும், அல்லு அர்ஜுனின் அதிகார பலத்துக்கு தகுந்த எதிரியாக அவரை உருவாக்கியிருக்கிறார்கள்.அல்லு அர்ஜுனை அடக்கும் தன்மையுடைய ரஷ்மிகா மிக தாராளமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாகத்தில் காதலாகப் பார்ப்பவர்களை இங்கு காமத்தில் கலங்க வைக்கிறார்.

படத்தின் முதல் பாதி இடைவேளை வரையிலான பரபரப்புடன் நின்றிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு, படம் முழுவதும் சென்டிமென்ட் பக்கம் செல்கிறது. பஹத் பாசிலின் கதாபாத்திரத்திற்கு முடிவு சொல்லப்பட்ட பிறகு, அடுத்த யார் எதிரியாக வரப்போவார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. ஆனால், அரசியல் பாதையில் கதை நகரத் தொடங்கும் போது சில இடங்களில் தடுமாறுகிறது. அதேசமயம் சில லாஜிக் பிழைகளையும் தவிர்த்திருக்கலாம்.மூன்று மணி நேரத்தைத் தாண்டியும், படம் ஓடுவதில் பெருமளவு சலிப்பின்றி மாஸ் என்டர்டெயின்மென்ட் அனுபவத்தை அளிக்கிறது.

- Advertisement -

Read more

Local News