தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். பல திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தவர் ஸ்ரீனிவாச ராவ். அவரது தனித்துவமான சிரிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். அதன் பிறகு 2005ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படத்தில் அவரின் சனியன் சகடை என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்கு பதிந்தது. பின்னர் 2011ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் ஆளவந்தான் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
81 வயதான கோட்டா ஸ்ரீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், இன்று தெலுங்கானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத் தொகுதியில் வசிக்கும் ஸ்ரீனிவாச ராவ், ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்ய வருகை தந்தார்.அவருடன் மனைவியும், உதவியாளரும் வந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பின்னர், ஸ்ரீனிவாச ராவ் தனது வாக்கினை பதிவு செய்தார். திரைப்படங்களில் கம்பீரமான வில்லனாக பலரை மிரட்டிய அவர், தற்போது வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாத நிலையில், பிறரின் உதவியுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்த காட்சி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், அவரின் வாக்களிக்கும் ஜனநயாக கடமையை ஆற்றியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.