யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்தை, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பாரதியுடன் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன் இயக்குகிறார். இந்தப் படத்தை தேவ் சினிமா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, அனாமிகா மகி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் லெனின் பாரதியும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்ஷ்மன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பிரதீப் மேற்கொள்கிறார்.
இந்தப்படம் குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது: “சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியாக இருக்கும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் வாழ்க்கையும், அவன் காதலும் இப்படத்தின் கருவாக அமைந்துள்ளன. உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாகிறது. யோகி பாபு, காதல் நாயகனாகவும், உணர்ச்சிவயப்பான வேடத்திலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது” என கூறினார்.