தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது, அவர் தெலுங்கு திரையுலகில் நானியுடன் இணைந்து ‘ஹிட் 3’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீநிதி, பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கவுள்ள ராமாயண திரைப்படத்தில், சீதை வேடத்திற்காக ஆடிஷனில் கலந்துகொண்டதாக கூறியுள்ளார். இந்த படத்தை நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார்.
தயாரிப்பாளர்களுக்கு தனது நடிப்பு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ‘கே.ஜி.எப்’ படத்தில் தனது ஜோடியாக நடித்த யாஷ், இந்தப் படத்தில் ராவணனாக நடிக்கவிருப்பதால், தன்னை அந்த படத்தில் நடிக்கவைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சீதை கதாபாத்திரத்திற்காக சாய் பல்லவி மிகவும் பொருத்தமான தேர்வாக இருப்பார் என்றும் அவரை புகழ்ந்துள்ளார்.