உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், சார்லஸ் பெல்லெக்ரினோ எழுதி வரும் ‘Ghosts of Hiroshima’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்போது அந்த புத்தகத்தைப் பற்றிய தனது எண்ணங்களை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

“இந்த புத்தகத்தில் உள்ள சில கதைகள் எனது மனதை ஆழமாக ஈர்த்துவிட்டன. டைட்டானிக் படத்துக்குப் பிறகு இவ்வளவு சக்திவாய்ந்த உண்மைக் கதையைக் காணவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த திரைப்படம், சார்லஸ் பெல்லெக்ரினோவின் ‘Ghosts of Hiroshima’ மற்றும் ‘Last Train From Hiroshima’ ஆகிய இரு நூல்களின் அடிப்படையில் உருவாகும் எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த திரைப்படம் அவரது பிற படங்களைவிட குறைவான வசூல் செய்யும் படமாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா வீசிய அணு குண்டு வெடிப்புகளையும், அதில் உயிர் தப்பிய ஒருவரின் அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.