முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நடிகர் ரஜினிகாந்த், ஆர். எம். வீரப்பனைப்பற்றி பேசிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த், அனைவருக்கும் வணக்கம்… “ஆர்.எம்.வி – தி கிங் மேக்கர்” என்ற ஆவணப்படத்தில் அவரைப் பற்றிப் பேசும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடன் மிக நெருங்கிய உறவினையும், அன்பையும், மரியாதையையும் காட்டிய சில பேர் உள்ளார்கள். அதில் மூன்று அல்லது நான்கு பேர் என்று சொல்வேன். அவர்களில் கே. பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வி. சார் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இப்போது இல்லாத சூழலில், சில நேரங்களில் அவர்கள் பற்றிய நினைவுகள் மிகவும் வலியாக வருகிறது.
‘பாட்ஷா’ திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில், நான் வெடிகுண்டு கலாச்சாரத்தைப் பற்றிய பேச்சை மேடையில் பேசியிருந்தேன். அந்த நிகழ்வில் அமைச்சர் மேடையில் இருந்தபோதுதான் அந்த உரையை நான் நிகழ்த்தினேன். ஆனால் அப்போது எனக்கு முழுமையான தெளிவும், புரிதலும் இல்லை. எனவே பேசிவிட்டேன். அந்த நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்தவர் எம்.ஆர்.வீரப்பன். என் பேச்சுக்குப் பிறகு, புரட்சித்தலைவி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.
அந்த சம்பவம் நடந்தபோது எனக்குள் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. “நீங்கள் அமைச்சர் மேடையில் இருக்கும்போது, ரஜினி அரசு மீது விமர்சனம் செய்துவிட்டார், அதை ஏன் நீங்கள் தடுக்கவில்லை?” என்ற கேள்வியுடன் அவரை பதவியில் இருந்து நீக்கியது எனக்கு மிகவும் அதிர்ச்சி. இது நடந்ததும், “இது என்னால்தான் நடந்தது” என்று எனக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டது. அந்த இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. யாருக்குப் போன் செய்தாலும் எவரும் எடுக்கவில்லை. மறுநாள் காலை நேரில் சென்று, “சார், இது என்னால்தான் நடந்தது… மன்னிக்கணும்” என்று சொன்னேன். அதற்கு அவர், எதுவும் நடக்காதது போல், “அதெல்லாம் விடுங்க… அதைப் பற்றி கவலைப்படாதீங்க… மனசுல வைச்சுக்காதீங்க… நீங்க விடுங்க… சந்தோஷமா இருங்க… எங்க ஷூட்டிங்?” என்று சாதாரணமாகவே கேட்டு பேசினார்.
இந்த சம்பவம் எனக்கு ஒரு ஆழமான தழும்பாகவே இருந்து வருகிறது. அது ஒருபோதும் போகவில்லை. ஏனென்றால் அந்த நிகழ்வின் கடைசியாக பேசியவர் நான்தான். நான் பேசிய பிறகு, அவர் மேடையில் வந்து எப்படி பேச முடியும்? மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக பேச சில காரணங்கள் இருந்தாலும், இந்த விஷயமே மிக முக்கியமானது என்று நான் எண்ணுகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.