2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “கலகலப்பு” திரைப்படம், விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்ட நடிகர்களின் கலகலப்பான நடிப்பில் வெளியானது. படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், 2018-ம் ஆண்டு “கலகலப்பு 2” வெளியாகியது. இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், “கலகலப்பு 3” படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, “கலகலப்பு 3” பற்றிய புதிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில், “மதகஜராஜா” திரைப்படத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியை வைத்து “கலகலப்பு 3” திரைப்படத்தை உருவாக்க சுந்தர்.சி திட்டமிட்டிருந்தார். ஆனால், “மதகஜராஜா” வெளியாகிய பிறகு, அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. “கலகலப்பு 3” படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.