தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடித்த ‘ஆண் பாவம்’ திரைப்படத்தில், விகே ராமசாமிக்கு அம்மாவாகவும், பாண்டியராஜனுக்கு பாட்டியாகவும் நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. சிவகங்கை மாவட்டம், தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். இந்த திரைப்படம் மூலமாகவே பாண்டியராஜன் அவரை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

நாட்டுப்புற பாடகியாக அறியப்படும் இவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியுள்ளர். அவர் பாடிய கிராமியப் பாடல்கள், வானொலியின் வாயிலாக 30 ஆண்டுகளுக்கும் மேல் ஒலித்தன. ‘ஆண் பாவம்’ திரைப்படத்திற்கு பிறகு, ‘கோபாலா கோபாலா’, ‘ஆயிசு நூறு’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1993ஆம் ஆண்டு, இவரது கலைச்சேவையை பாராட்டி, முதல்வர் ஜெயலலிதா அவருக்கு ‘கலைமாமணி’ விருதை வழங்கினார்.
ஒருமுறை பாடல் பதிவு செய்யச் சென்றபோது, இவரது கணவர் மரணமடைந்ததால் திரைத்துறையை விட்டு விலகினார். பின்னர் தனது மகளின் மறைவால் மேலும் மவுனமாகி விட்டார்.தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி, வயது முதிர்வினால் காலமானார். அவருக்கு வயது 99. அவருடைய மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.