ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற “அலேலா பொலேமா” என்ற வரி பலரையும் கவர்ந்தது. இதன் அர்த்தம் என்னவென்று பலரும் ஆர்வமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “அலேலா பொலேமா” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?” என்று அனிருத்திடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்தது: “நான் டீசருக்காக வேலை செய்து கொண்டிருந்தபோது, கொஞ்சம் கிரேசியாக ஏதாவது செய்து கொண்டிருந்தேன். ஸ்டுடியோவில் எதையாவது உளறிக்கொண்டு பாடிக் கொண்டிருப்பேன். அப்படித்தான் ‘அலேலா பொலேமா, அலேலா பொலேமா லே’ என்று பாடி, அதை இயக்குநர் லோகேஷிற்கு அனுப்பினேன். அவர் அதை கேட்டதும், ‘இது என்ன? இதற்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்பார் என நினைத்தேன். ஆனால் அவர், ‘டீசரில் எனக்கு பிடித்தது இதுதான்’ என்று கூறினார்.
அப்படிப்பட்ட மனநிலையில்தான் நாங்கள் இருந்தோம். ‘அலேலா பொலேமா’ என்பது அப்படிப்பட்ட ஒரு ஜிப்ரிஷ் வார்த்தை. இதன் அர்த்தம் என்னவென்று நான் தேடியபோது, கிரேக்க மொழியில் ‘நாங்கள் சண்டைக்குத் தயார்’ என்று பொருள் இருப்பதை கண்டேன். ஆனால் அதை நான் பாடியபோது, இந்த அர்த்தம் எனக்குத் தெரியாது. சும்மாவே பாடியதே அது” என்று கூறியுள்ளார்.