நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள ‘வார் 2’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 55 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. பட வெளியீட்டிற்கு முன் மும்பையில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் ஹிர்த்திக் ரோஷனும், ஜூனியர் என்.டி.ஆரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர், “உங்களுடன் பணியாற்றியது எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது. உங்களுடன் திரையில் தோன்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னை ஒரு சகோதரனாக நடத்தினதற்கு மிக்க நன்றி. பாலிவுட்டிற்கு என்னை இருகரங்களுடன் வரவேற்றதற்கும் நன்றி” என்று ஹிர்த்திக் ரோஷனை நோக்கி கூறினார். பின்னர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியை நோக்கி, “சார், நான் தென்னிந்தியாவிலிருந்து வருகிறேன். வடக்கு மற்றும் தெற்கிற்கிடையிலான பல தடைகளை தகர்த்தவர் ராஜமௌலி. ஆனாலும், ஒவ்வொரு தென்னிந்தியருக்கும், பாலிவுட் அவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்ற ஒரு சந்தேகம் எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஹிர்த்திக் ரோஷனை மீண்டும் நோக்கி, “என்னை இருகரங்களால் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி சார். முதல் நாளிலிருந்து நீங்கள் எனக்கு அளித்த அரவணைப்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்றார். அதற்குப் பிறகு பேசிய ஹிர்த்திக் ரோஷன், “ஜூனியர் என்.டி.ஆரில் நான் என்னையே நிறையப் பார்க்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் ஒரே மாதிரியான பயணத்தில் இருக்கிறோம். அவரும் என்னுள் தன்னைக் காண்கிறார் என்று நம்புகிறேன். ஒரே முறையில், மறு டேக் எடுக்காமல் நடிக்கக் கூடியவர் என்றால் அது ஜூனியர் என்.டி.ஆர் தான்.
படப்பிடிப்பின் போது, அவரின் நடிப்பைப் பார்த்ததோடு மட்டும் இல்லாமல், அவரிடமிருந்து நான் கற்றும் கொண்டேன். ஒரு ஷாட்டில் 100 சதவீத அர்ப்பணிப்புடன் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக்கொண்டேன். அதை என் எதிர்கால படங்களில் பயன்படுத்துவேன். அதை எனக்குக் கற்றுக்கொடுத்த ஜூனியர் என்.டி.ஆருக்கு நன்றி” என்றார். ‘வார் 2’ படத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளார்.