நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘விலாயத் புத்தா’ நவம்பர் 21 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய ‘விலாயத் புத்தா’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த டீசர் மற்றும் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள், இது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தைப் போலத் தெரிகிறது என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

அதற்குக் காரணம், பிரித்விராஜ் இப்படத்தில் ‘டபுள் மோகனன்’ என்ற சந்தனக் கடத்தல்காரராக நடித்திருப்பது. டீசரிலும் கூட அவர் “நான் புஷ்பா அளவுக்கு பெரிய ஆள் இல்லை” என்று கூறும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இந்த சூழலில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பிரித்விராஜ், ‘விலாயத் புத்தா’ மற்றும் ‘புஷ்பா’ படங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
அதாவது, இந்த படத்தின் கதையை மறைந்த சாச்சி (அய்யப்பனும் கோஷியும் இயக்குநர்) எனக்கு சொன்னபோது, புஷ்பா முதல் பாகமே ரிலீஸ் ஆகவில்லை. மேலும் இது எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய நாவல். இப்போது படம் முடிந்து ரிலீஸ் ஆகும் நேரத்திற்கு புஷ்பாவின் இரண்டு பாகங்களும் வெளியானுவிட்டன. என் ‘டபுள் மோகனன்’ கதாபாத்திரத்துக்கும் ‘புஷ்பராஜ்’ கதாபாத்திரத்துக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. கதைக்களம் ஒரே மாதிரி தோன்றலாம், ஆனால் கதைகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதனால்தான் காலதாமதமாயினும் இந்த படத்தை விடாமுயற்சியுடன் உருவாக்கி கொண்டுவந்தோம்” என்றார்.

