நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். கோலிவுட் திரையுலகில், இந்த இருவரும் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணியாகக் கருதப்பட்டு வந்த நிலையில், சில கருத்து வேறுபாடுகளால் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை.
இதனால், சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைவது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த காமெடி கூட்டணி, ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘கைப்புள்ள’, ‘வீரபாகு’ போன்ற படங்களில் வடிவேலு நடித்த சிங்காரம் என்ற கதாபாத்திரத்தின் ஒற்றுமை இந்தப் படத்திலும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் முன்னோட்டமாக, படக்குழு தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் மிகுந்த நகைச்சுவையுடன் அமைந்திருக்கிறது. இதில், சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து பல நூறு கோடி ரூபாயை திருட திட்டமிடுவதாகக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதோடு, வடிவேலு பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருப்பது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.