கடந்த 2021ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரை பிரபல தென் கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கியிருந்தார். தென் கொரியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த கடன் நிறுவனங்களின் கொடுமையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கிய மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு பயங்கர விளையாட்டை மையமாகக் கொண்டதுதான் இந்த ஸ்குவிட் கேம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட தொடராக இது உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. சீசன் 2 முடிவில், இந்த தொடரின் கடைசி சீசன் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், ஸ்குவிட் கேம் தொடரின் இறுதிச் சீசன் வருகிற ஜூன் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. தற்போது, இறுதிச் சீசனுக்கான முழு டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகனின் மனிதநேயம் மற்றும் வாழ்க்கை நோக்கை பிரதிபலிக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. டிரெய்லருக்கான காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இதன் மூலம் தொடரின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துள்ளது.